தமிழகத்தின் வனப்புமிகு சுற்றுலாத் தலம் கொடைக்கானல் மலை ஆகும். கோடை காலத்தில் அதன் அழகை ரசித்திட வருவோர், அங்கே குடிகொண்டுள்ள குறிஞ்சி ஆண்டவரை தரிசனம் செய்திடாமல் திரும்ப மாட்டார்கள்.
`குறிஞ்சி மலர்', மலர்களிலேயே தனிச்சிறப்பு பெற்றது. மலைச்சாரலில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூத்துக் குலுங்கும் தனிச் சிறப்பைப் பெற்றது. அப்போது, மலைச் சாரலிலே, அடுக்கடுக்காய் குறிஞ்சி மலர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்திடவே மக்கள், கொடைக்கானலுக்கு விரைந்து சென்றிடுவர். அத்தகைய சிறப்பினைக் கொண்ட மலரின் பெயரையே தன்னோடு கொண்டு, முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயிலே குறிஞ்சி ஆண்டவர் கோயில்.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவுதான். `நாயுடுபுரம்' சென்று, கோயிலை அடையலாம். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் அழகிய கோயில். அமைதியான சூழலில் குறிஞ்சி ஆண்டவர் தரிசனம், அற்புதமான மனநிறைவைத் தருவதாகும்.
குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். திருக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, திருக்கோயிலில் `தங்கும் விடுதி' ஒன்றும் உள்ளது. பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தில் அனுமதி பெற்று அங்கு தங்கி, குறிஞ்சி ஆண்டவரை வழிபடலாம்.
பூம்பாறை
குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் கொடைக்கானலில் மலர்களுக்கா பஞ்சம். அதனால்தானோ என்னவோ, ஓர் இடத்திற்கு பூம்பாறை என்று பெயரிட்டுவிட்டார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் அருள்பாலிக்கும் தலங்கள்தானே!
பூம்பாறையில் `குழந்தை வேலப்பர்'என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார், தண்டாயுதபாணி. அபயஹஸ்த திருக்கோலம். கொடைக்கானலுக்கு மேற்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்தது பூம்பாறை. நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.
தாண்டிக்குடி
திண்டுக்கல் மாவட்டத்தின் இறுதிச்சுற்றில் வலம் வரும் நாம், எத்தனை முருகன் கோயில்களை தரிசிக்கிறோம்! பூம்பாறைக்கு அடுத்து, தாண்டிக்குடி பாலமுருகன் கோயில். பழமுதிர் சோலையிலிருந்து பழநிமலைக்கு தாண்டிச்சென்று குடி போனானாம் பாலமுருகன். அதனால் `தாண்டிக்குடி மலை' என்று அழைக்கப்படுகிறது இந்த மலை. சுவையான கதைதான். பாரதத்திலும் கந்தபுராணத்திலும் எத்தனை உபகதைகள்! அத்தனையும் விறுவிறுப்பான நிகழ்வுகள்... ஆண்டவரின் அருட்கோலங்கள் நிகழ்த்திடும் அற்புதங்களே!
கைலாயம் சென்ற அகத்தியருக்கு சிவகிரி, சக்திகிரி என்ற இருகுன்றுகள் பரிசாகக் கிடைத்ததாம். கேதாரமலையை அடைந்த அகத்தியரை இடும்பன் சந்திக்கிறான். முருகன் அருளைப்பெற தனக்கு உதவிட வேண்டுகிறான். தென்னகத்தில் உள்ள பொதிகை வரை அந்த மலைகளைக் கொண்டு செல்ல உதவினால், முருகனின் திருவருள் கிட்டிடும் எனக் கூறுகிறார். மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறான் இடும்பன்.
பலசாலியாக இருப்பினும், இரண்டு சிகரங்களையும் அவனால் தூக்கிட முடியவில்லை. இடும்பனுக்கு அகத்தியர் மந்திரோபதேசம் செய்து அந்த வல்லமையை அளிக்கிறார். மந்திரத்தின் மகிமையால் பிரம்மதண்டம் தோன்றி, அதுவே காவடிக் கோலாக `துலாதண்டம்' ஆகிறது. அஷ்டநாகங்கள் காவடியைத் தாங்கிடும் கயிறுகளாகின. இரு மலைச் சிகரங்களையும் காவடியாகத் தூக்கிக்கொண்டு நடக்கிறான் இடும்பன்.
திருவாவினன் குடியருகில் சற்று இளைப்பாறுகிறான் இடும்பன். அங்கே முருகனின் திருவருள் சிறுவன் வடிவில் எதிர்கொள்கிறது. இடும்பனை சம்காரம் செய்து தனது திருவடிகள் அருகிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான் முருகன். பழமுதிர் சோலைக்கு வந்த பின்னர், பழநி மலை அருகில் இடும்பனை சம்காரம் செய்கிறான். அதுவே இடும்பன் மலை எனப்படுகிறது. அங்கிருந்து பழநி மலைக்கு தாண்டிச்சென்று குடிபோனான் குமரன். தாண்டிக்குடிக்கு வந்த கந்தக முனிவர் எழுப்பிய கோயிலே தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில். கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில், சுற்றிலும் நீலமலைகள் சூழ்ந்திட, குன்றுகள் மனதைக் கவர்ந்திட அதன் அழகே அழகு!
நின்றகோலத்தில் குமரன் கோலோச்சுகிறான். `பாலமுருகன்' என்ற திருநாமம். சின்னஞ்சிறு குமரன் ஆனதால் தானே இத்தனை மலைகளிலும் எளிதாக ஏறி நின்று கொள்கிறான். மலைப்படிகளை ஏறி அனுபவித்தோருக்குத்தான் அதன் அருமை தெரியும்.
தன்னை வலம் வருவோருக்கு, அருளை அருவியாக வாரி வழங்குகிறான் தாண்டிக்குடி பாலமுருகன். கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் சமயங்களில் இங்கே விழாக்கோலம்தான். கணபதி, முருகன், இடும்பன், பைரவர், அகஸ்தியருக்கு தனி சந்நதிகளும் உள்ளன.
ஆயக்குடி
ஒட்டன்சத்திரத்திலிருந்து, பழநி நோக்கி நமது பயணம் தொடருகிறது. வழியில் `ஆயக்குடி' எனும் சிற்றூர். பழநிமலைக் கோயிலுக்கு பல திருப்பணிகளைச் செய்த பெருமக்கள், ஆயக்குடி ஜமீந்தார் பரம்பரையினர்.
ஆயக்குடியில் சோழீசுவரர் அருள்பாலிக்கும் திருக்கோயில் உள்ளது. அகோபில மடத்திற்குக் கட்டுப்பட்டிருந்த வைணவர்கள், தங்கள் பெயரோடு `ஓபில' என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொள்வர். மதுரை வைகையாற்றில் ``ஓபிலா படித்துறை'' என்று ஸ்நான கட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயக்குடியில் வரதராஜப் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.
கோதை மங்கலம்
பழநிக்கு 5 கி.மீ. வடக்கில் உள்ள கிராமம், கோதை மங்கலம். பழநியைச் சுற்றி `மங்கலம்' என்று அழைக்கப்படும் தலங்களில் முதலாவது இதுவே.
சண்முக நதிக்கரையில் அமைந்துள்ளது கோதஈசுவரர் திருக்கோயில். கந்தசஷ்டி திருநாளில், பழநி தண்டாயுதபாணியின் உற்சவமூர்த்தி இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி, `சூரசம்ஹாரம்' வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
கோதை மங்கலத்திற்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் கோரைக்கடவு. சொக்கநாதர் - மீனாட்சி அருள்பாலிக்கும் திருத்தலம் இது.
பெரிய கோட்டை
பழநிக்கு 20 கி.மீ. தொலைவில் வடகிழக்கே உள்ளது பெரிய கோட்டை சோழீசுவரர் திருக்கோயில்.
மானூர்
பழநிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் `மானூர்'. நாரதரின் விளையாட்டால் `ஞானப்பழம்' விநாயகருக்குக் கிடைத்திட, அகில உலகையும், மயில்வாகனனாகச் சுற்றிவந்த முருகப்பெருமான், பழநி மலை மீது குடிகொண்டுவிடுகிறார். முருகனைத் தேடி வருகிறார்கள் அம்மையப்பர்.
எழில்மிக்கதொரு தலத்தைக் கண்ட பரமேசுவரன், அங்கேயே தங்கி மக்களுக்கு அருள்பாலித்திட எண்ணுகிறார். அன்னை உமையவளின் உள்ளமோ, மகனைக் காணத் துடிக்கிறது. சிவனைவிட்டுப் பிரியவும் மனம் இல்லை. விடை கொடுக்க சிவனாருக்கும் மனம் இல்லை. `பிரியாவிடையார்' என்று திருநாமங்கொண்டு மானூரிலேயே தங்கிவிடுகிறார் எம்பெருமான்.
மானைத் துரத்திச் சென்ற மன்னன்
விராட மகாராஜாவுக்கு வேட்டையாடுவதில் அலாதி பிரியம். அப்படி ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, அழகியதோர் மானைக் கண்டு மயங்கினான் அரசன். அதனைத் துரத்திச் சென்றான். அவனறியான் அந்த மான், `மானேந்தியப்பர்'தான் என்பதை! மன்னன் பிடியில் சிக்காமல் புதர் ஒன்றினுள் ஓடி ஒளிந்தது அந்த மாயமான். வில்லை எடுத்தான் வேந்தன். அம்பினைப் பூட்டி நாணேற்றி, மானை நோக்கிச் செலுத்தினான். அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்து அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அம்பு பாய்ந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்துப் பெருக்கோடியது. மன்னன் நடுங்கிப் போனான். அங்கே புதருக்குள்ளே புதையுண்டு இருந்த சிவலிங்கத் திருமேனியின் சிரசிலிருந்து குருதி வெளிப்பட்டதைக் கண்டான் அரசன். அறியாது செய்த பிழைபொறுத்தருள வேண்டி மண்டியிட்டான். அந்த இடத்திலேயே நிலைகொண்டு மக்களுக்கு அருள்பாலித்திட இறைவனை வேண்டினான். அதனாலேயே `மானூர்' என்று பெயர் பெற்றது இந்தத் திருத்தலம்.
அம்மன் சந்நதி இல்லை
பார்வதி, திருமுருகனைத் தேடிச் சென்றுவிட்டதால், இங்கே அம்மனுக்குத் தனி சந்நதி இல்லை. `சிவசக்தி' ஸ்வரூபமாக, இறைவனே அருள்பாலிக்கிறார். பிரியாவுடையாரை மக்கள் `பெரியாவுடையார்' என்றே அழைக்கத் துவங்கிவிட்டனர். தலவிருட்சம் கடம்பமரம்.
`ஆடிப்பெருக்கு' நாளில் அன்னை பெரியநாயகியாக இங்கே எழுந்தருளுவதாக ஐதிகம். அன்றைய தினம் `தாலிச்சரடை' மாற்றிக்கொள்ள பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுகிறார்கள்.
மேற்கு நோக்கிய சந்நதியாக அமைந்துள்ளதால் `தோஷநிவர்த்தி' தலமாக விளங்குகிறது மானூர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கிறது.
எப்படிச் செல்வது?
இத்தனை சிறப்புகள் இருந்தும், மானூரை சென்றடைய சற்று சிரமம் மேற்கொள்ளவேண்டும். நகரப் பேருந்தையே நம்பியிருக்க வேண்டி உள்ளது. ஆறு கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது மானூர். வடக்கே `அலங்கியம்' செல்லும் பேருந்துகளையோ, அல்லது நகரப் பேருந்தையோ நாடவேண்டும். போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருந்தால், பழநிக்கு வரும் பக்தர்கள், மானூர் வரை சென்று பெரியாவுடையாரையும் தரிசித்துச் செல்ல முடியும். `சிற்றுந்து' வசதி அமைந்தாலும் சிறப்பாக இருக்கும். |
கலயம்புத்தூர்
பழநிக்கு வடமேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னக்கலயம்புத்தூர். கைலாசநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. சண்முகநதிக்கரையோரம், மண்ணூரில் சோழீசுவரர் திருக்கோயிலும் உள்ளது.
கீரனூர்
பழநிக்கு வடக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கீரனூர். இது திண்டுக்கல், ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ளது. 1500 அடி உயரம் சிவலிங்க வடிவில் அமைந்துள்ள மலையொன்றை காணலாம். அதன் வடபாகத்தில் அமைந்துள்ளது மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில்.
பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது,விராடராஜனின் நாட்டில் தங்கியபோது,இந்த மலைப்பகுதிக்கும் வந்து சென்றனராம். புராணச்சிறப்பும் பெற்றுவிட்ட திருத்தலம் கீரனூர்.
மலைஉச்சியிலும், பழமையான மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஒன்று உள்ளது. ஒற்றையடிப் பாதையாக அமைந்துள்ள, ஆயிரத்துக்கும் மேலான படிகளைக் கடந்து செல்லவேண்டும். ஒருவர் பின்னே ஒருவராகச் செல்ல வேண்டிய குறுகலான பாதை அது.
பால சமுத்திரம்!
பழநிக்குத் தெற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் பாலசமுத்திரம். விசாலாட்சியுடன் விசுவநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்கும் இவ்வூரில் அகோபில வரதராஜப்பெருமாளுக்கும் கோயில் உள்ளது.
திருவாவினங்குடி
திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல, தமிழகம் முழுவதற்கும் பெருமை சேர்க்கும் திருத்தலமே பழநி. ஞானப்பழம் வேண்டி, மயில்மேல் ஏறி ஏழுலகையும் சுற்றி வந்தும், அந்த மாங்கனி தனக்குக் கிடைக்காமல் போனதால் வருத்தமுற்று, மலைமீது குடிகொண்டுள்ள முருகனின் அருட்தலம். அங்கேதான் அடுத்து செல்லப்போகிறோம். அறுபடை வீடுகளில் ஒன்றான திருவாவினன்குடியும், பழநியும்தான், திண்டுக்கல் மாவட்டப் பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.
சங்ககாலத்து நூலான அகநானூற்றிலே `பொதினி' என்று கூறப்பட்டுள்ள தலம் இதுவே. அதுவே காலப்போக்கில் மருவி `பழநி' என்று ஆகிவிட்டது.
பழனங்கள் - வயல்கள் சூழ்ந்த ஊரை பழனி என்று கூறுவர். `பழநி' என்று பெயர் வந்ததற்கு காரணமான புராண வரலாறும் உண்டு.
சண்முக நதிக்கரையில், 450 அடி உயரமும், 697 படிகளும் கொண்ட மலைமீது அமைந்துள்ள மலைக்கோயிலும், அடிவாரமான திருவாவினன்குடியில் குழந்தை வேலப்பர் கோயிலுமே, முக்கியமானவை.
அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ள திருத்தலம் இது. மூலவர், மீனாட்சி சுந்தரேசுவரர். பிரதான மூர்த்தியாக அருள்பாலிப்பவர் குழந்தை வேலாயுதசாமி. திருமகள், காமதேனு, சூரியன், அக்னி ஆகியோர் வழிபட்ட தலமாகையால் `திரு-ஆவினன்குடி' எனப் பெயர் கொண்டது.
பழநி
பழநி ஆண்டவர் அருள்பாலிப்பது, பழநியில் அமைந்துள்ள மலைக்கோயிலில்தான். மேற்கு நோக்கிய சந்நதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. கேரளத்து மாநிலத்தவர், `எங்களை நோக்கியபடியே முருகப்பெருமான் அருள்பாலிப்பது, எங்களுக்கு பெருமை என்பதோடு, செவ்வாய் தோஷம் தங்களை அண்டாது' என்றும் நம்புகிறார்கள்.
மாங்கனிக்காக உலகம் சுற்றிய குமரன்
அபூர்வமான மாங்கனி ஒன்றைக் கரத்தில் எடுத்துக்கொண்டு நாரத மாமுனிவர், கயிலைக்குச் சென்றார். மலையப்பரிடம் மாங்கனியை அவர் தந்தபோது, தனையர் இருவரும் அருகில் அமர்ந்திருந்த நேரம். இருவருமே `பழம் எனக்குத்தான்' என்று உரிமை கோர, தனது திருவிளையாடலைத் தொடர்ந்தார் மகேசன். `யார் உலகை முதலில் சுற்றி வருகின்றாரோ, அவருக்கே இந்தக் கனி' என்றும் கூறிவிட்டார்.
``இவ்வளவுதானே! இதோ இப்போதே புறப்படுகிறேன்! சடுதியில் திரும்பி வந்து கனியைப் பெற்றிடுவேன்!'' எனச் சூளுரைத்து, மயில் மீதேறிப் புறப்பட்டார் செல்வமுருகன். வித்தகர் விநாயகரோ, ``அண்ட சராசரங்களும் அம்மையப்பரில் அடக்கம், அவர்களைச் சுற்றி வந்தாலே, உலகம் அனைத்தையும் சுற்றிவந்ததாகத் தானே அர்த்தம்'' என்று, பெற்றோரை வலம் வந்து விளக்கத்தையும் கூறி கனியைப் பெற்றுக்கொண்டார். உலகை வலம் வந்த முருகனோ, மூத்தவர் விநாயகரின் கரத்தில் பழத்தைக்கண்டதும் சினங்கொண்டார். ஆண்டிக் கோலத்துடன் மலைமீது எழுந்தருளினார்.
``நீயே பழமாக இருக்க உனக்கு வேறு பழம் வேண்டுமோ?'' என இறைவனும் அருமை மைந்தனை சமாதானப்படுத்தியதாக கந்தபுராணம் கூறுகிறது.
கிரிவலம்
மேற்குதொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக பழநி மலை விளங்குகிறது. கடல் மட்டத்திற்கு மேலே 668 அடி உயரத்தில் உள்ளது. மலையைச் சுற்றவர அழகிய சாலை, இருபுறமும் பச்சைப் பசேலென்ற உயர்ந்த மரங்கள், கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம். சுற்றிவரும்போது பற்பல சிறுகோயில்களும், அறச்சாலைகளும், சாதுக்களின் தியானமண்டபங்களும், மயில் மண்டபங்களும் மனம் நிறைந்த உணர்வை உருவாக்குகின்றன. மலைக்கு இரண்டரை மைல் (4 கி.மீ.) தொலைவில் `சண்முக நதி' பாய்கிறது. மலைக்கு எதிரே உள்ளது `இடும்பன் மலை'.
மலைக்கோயிலைச் சென்றடைய பல்வேறு பாதைகளைப் பயன்படுத்துகிறார்கள். படிகளைக் கடந்து நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. யானைப் பாதையில் மூச்சு இறைக்காமல் மலை ஏறுவோரும் உண்டு. வசதியாக `விஞ்ச்' `ரோப் கார்' ஏறி கணப்பொழுதில் கந்தனைக் கண்டிட மலைமேல் சென்றடைவோரும் உண்டு.
மேற்கு நோக்கிய சந்நதி. திருவாயிலில் நுழைந்து, மயில்மண்டம், மாணிக்கம்படி மண்டபம் தாண்டி, ராஜகோபுரவாசல் வழியே பார்வேல் மண்டபத்தை அடையலாம். அற்புதமான சிற்பங்களைக் கொண்டது பார்வேல் மண்டபம்.
பழநி ஆண்டவரின் தரிசனம் பெற நவரங்கமண்டபம் வழியே செல்லவேண்டும். தமிழகத்திலேயே முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருத்தலங்களில், மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடுவது பழநியில்தான்.
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஐப்பசி சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் மயம்தான். அக்கினி நட்சத்திர நாட்களில் மக்கள் பெரும் திரளாக கிரிவலம் வருவதைக் காணலாம்.
கருவறையின் வெளிப்புறச் சுவரிலும், மலைப்படி தொடக்கத்தில் உள்ள சேர விநாயகர் கோயில் வாசலிலும் `குதிரை மீது அமர்ந்த அரசர்' உருவம் சித்திரிக்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமானே அவர் என்றும் கூறுவர்.
`போகர்' என்ற சித்தரால் ஒன்பது பாஷாணங்களால் உருவாக்கப்பட்ட அற்புதத் திருமேனியே, கருவறையில் நாம் காணும் தண்டாயுதபாணி. மூலவருக்கு அபிஷேகம் செய்வித்த பால், சந்தனம், தேன் இவை அத்தனையும் கொடிய நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகளாம்.
தினமும் ஏழு கால வழிபாடு நடைபெறுகிறது. அலகு குத்தி வருதல், முடிப்பிரார்த்தனை, பால்குடம், காவடி ஆகியவை இத்தலத்தின் சிறப்பு நேர்த்திக் கடன்கள் ஆகும். மூலவர் `பஞ்சாமிர்த அபிஷேகம்' தனிச்சிறப்பு பெற்றது.
நாம் முதலில் ஆண்டவரை கண்குளிர தரிசனம் செய்தபிறகு, சுயம்புலிங்கமானமலைக்கொழுந்தீசுவரரையும், மலைநாச்சியம்மையையும் தரிசிக்கிறோம். தலவிருட்சம் நெல்லி.
பிராகாரத்தில் விநாயகர், நடராஜப்பெருமான், மாணிக்கவாசகர், ஆறுமுகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவகிரகங்கள், நக்கீரர், அருணகிரிநாதர் சந்நதிகளும் உள்ளன.
பக்தர்களுக்காக திருக்கோயில் நிர்வாகம் தேவையான சிறப்பு வசதிகளைச் செய்துள்ளது. தங்கும் விடுதிகளும், திருக்கோயில் நடத்திடும் கல்லூரிகளும் அவற்றில் அடங்கும்.
14, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் பல திருக்கோயிலில் காணப்படுகின்றன. பழநி பஞ்சாமிர்தமும், விபூதியும் உலகப் பிரசித்தி பெற்றவை. நாமும் அவற்றைப் பெற்றுக்கொண்டு, கோவை மாவட்டத்தின் தெற்கு எல்லை நோக்கிப் புறப்படுவோம்.
0 comments
Post a Comment